சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்றது.
மானிய கோரிக்கைகள் பதிலுரையில் பேசிய அத்துறை அமைச்சர் எ.வ.வேலு, "தமிழ்நாட்டில் 2001ஆம் ஆண்டு 52 லட்சம் வாகனங்கள் என இருந்த எண்ணிக்கை, 2020ஆம் ஆண்டு 2.95 கோடி வாகனங்கள் என உயர்ந்துள்ளது. 20 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் சாலைகளின் எண்ணிக்கை ஆமை வேகத்திலும், வாகனங்கள் எண்ணிக்கை முயல் வேககத்திலும் இருக்கிறது.
வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. சாலை, பாலங்கள் உள்ளிட்டவை அமைக்க 12718.91 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளையும் புதிதாக பொறுப்பெற்ற அரசு செயல்படுத்தி வருகிறது. 12688 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி பழைய திட்டங்களுக்கே செலவிடப்பட்டு வருகிறது" என்றார்.
மேலும், அதிமுகவை பகைவராக நாங்கள் நினைக்கவில்லை. பகைவருக்கும் உதவக்கூடியவர் எங்கள் முதலமைச்சர். மத்திய பல்கலைக்கழக படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்துக்கு நீங்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளீர்கள். அதை நாங்கள் புரிந்து கொண்டோம் என்றார்.
இதையும் படிங்க: 'ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரக்கன்றுகள் நடுவோம்' - அமைச்சர் எ.வ.வேலு