சென்னை: தமிழ்நாடு சட்டபேரவை இன்று (அக்.9) காலை 10 மணிக்கு பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் கூடியது. பேரவைத் தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கபட்டது. அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நேரம் தொடங்கி நடைபெற்றது.
இதில், அதிமுக சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, "மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றார். அதேபோல் மதுரை மாநகரில் குடிநீருடன் சாக்கடை நீரானது கலந்து வருகிறது. இந்த நிலையில், அரசு தனது பணிகளை விரைவுபடுத்த வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "கம்பத்திலிருந்து மதுரைக்கு நீர் கொண்டு வரும் பணியை அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கினாலும், கிணறு தோண்டும் அனுமதியை பெறவில்லை. அதேபோல் கடந்த ஆட்சியில் 60 கிலோ மீட்டருக்கு பைப் லைன் போடாமல் விட்ட நிலையில், தற்போது அந்த பணிகளானது தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், அந்த பணிகள் விரைவில் நிறைவு பெற்று, முதலமைச்சர் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பார்" என கூறினார்.
அப்போது குறுக்கீட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிச்சயமாக தண்ணீர் கிடைக்கும் என்றும், அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம். எனவே கவலைப்பட வேண்டாம் என கூறியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
இதையும் படிங்க: காவிரி விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்! அதிமுக ஆதரவு! பாஜக வெளிநடப்பு!