சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் 13 ஆவது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் அரங்கில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி தலைமையில், மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், இணை வேந்தருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 2019-20, 2020-21, 2021-22 ஆகிய கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பட்டம் பெற்ற 7 ஆயிரத்து 754 பேருக்கு பட்டங்களை தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி வழங்கினார். அவர்களில் முனைவர் பட்டம் பெற்ற 107 பேருக்கும், பல்கலைக் கழகத்தின் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 58 பேருக்கும் நேரில் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்திநராக கலந்துக் கொண்ட மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பேசும்போது, “வணக்கம் எல்லாரும் நல்லா இருக்கிங்களா” என தமிழில் பேசி பட்டமளிப்பு விழா உரையை தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், “விளையாட்டு வீரர்களால் சமூகத்தில் அனைத்து துறைகளிலும் சிறந்த மனிதராக விளங்க முடியும். இந்தியா விளையாட்டு துறையில் பெண்களின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிப்பதாகவு இருக்கிறது. தமிழகம் மிகச்சிறந்த கலாச்சார மையமாக விளங்குகிறது.பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் மிகவும் ஈற்புடையது. செஸ்,டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரராகள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், இந்தியாவில் விளையாட்டிற்காக உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும். உடற்கல்வி மற்றும் விளையாட்டு சார்ந்த செயல்பாடுகள், உடலையும் மனதையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன், சமூகம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கிறது.
இந்திய அரசு விளையாட்டு துறை சார்ந்து கேளோ இந்தியா போன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. விளையாட்டு துறையில் அறிவியல் தேவைகளும் அதிகம் உள்ளது. தடகள வீரர்களுக்கு அறிவியல் சார்ந்த படிப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. கேளோ இந்தியா போட்டிகளில் பங்குபெறும், பெண் குழந்தைகள் தேசிய சாதனைகளை முறியடித்து வருகின்றனர்.
வலிமையான இந்தியாவை உருவாக்க விளையாட்டு அவசியம் என்றும், இதனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் நடைபெற்ற சர்வதேச செஸ் விளையாட்டின் துவக்க விழாவிற்கு பிரதமர் மோடியும், தானும் வந்தோம். அப்போது பேசிய சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர், அடுத்து நடைபெறும் சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான சகோதர, சகோதரிகள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இங்கு பார்க்கும் பொழுது பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது மகிழ்சி அளிக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை - அண்ணாமலை!