சென்னை: வேளச்சேரி லயன்ஸ் கிளப் சார்பாக தேசிய வருவாய் வழி கல்வி உதவித்தொகைத்திட்டத் தேர்வுக்கு தயாராவதற்காக "படிப்பறிவுத் திறன் தேர்வுக்கான" புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(அக்.17) வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தப் புத்தகத்தை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 67 பேர் இணைந்து தயாரித்துள்ளனர்.
மிக அழகாகவும், ஆக்கப்பூர்வமாகவும் வடிவமைத்துள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அந்தப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மூலம் ஒரு பள்ளிக்கு 10 புத்தகம் வழங்கப்படும்.
யுபிஎஸ்சி தேர்வில் தொடக்கக் கல்வி பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்விலும் கேட்கப்படுகின்றன.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை காட்டிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்லிருந்து அதிக கேள்விகள் கேட்கப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுத்திறன் பயிற்சி
ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். குறிப்பாக, தேசிய திறனறிவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும், தேர்ச்சி பெறுவதற்கு காரணமாக இருக்கும் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்க வேண்டும், பிடிஎப் வடிவில் இருக்கும் புத்தகத்தையும் அரசின் மூலம் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுத் திறன் குறைவாக இருப்பதால், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தனர். பள்ளி நேரத்திற்குப் பின், அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலப் பேச்சுத்திறன் (spoken English) பயிற்சி அளிக்க, பள்ளிக்கல்வித்துறையின் கூட்டத்தில் ஆலோசித்து, முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்காக நாளை (அக்.18) முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும். திட்டத்தின் பெயரை முதலமைச்சர் அறிவிப்பார்.
மழலையர் பள்ளி திறப்பு
அங்கன்வாடிப் பள்ளியில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும் என ஆலோசனை மேற்கொண்டோம். ஆனால், அறிவிப்பு வெளியாகும்போது மழலையர் பள்ளி தொடங்குவது குறித்தும் தெரிவித்துள்ளனர். மழலையர் பள்ளி திறப்பது குறித்து நாளை முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்படும்.
தொடர்ந்து நீட் பயிற்சி
நீட் தேர்விற்கான பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பயிற்சி அளித்துக் கொண்டு இருக்கும் நிறுவனம் இல்லாமல், வேறு சில நிறுவனங்களும் பயிற்சி அளிப்பதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றன.
திமுகவின் நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பது, அதற்கான சட்டப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும். தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 12 மாநில முதலமைச்சர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தரமான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு சீருடை மட்டும் அல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் லேப்டாப் உள்ளிட்ட 14 வகையான பாெருட்கள் விரைவில் வழங்கப்படும்' என அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பி.இ, பி.டெக் கலந்தாய்வு - 62,683 காலி இடங்கள்