சென்னை தலைமைச் செயலகத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஆசிரியர்களுக்கான இணையதள அடிப்படை கணினி பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது," தமிழ்நாட்டில் உள்ள 432 மாவட்ட கருத்தாளர்களுக்கு இன்று (ஜூலை.26) முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன் பின் தமிழ்நாட்டிலுள்ள 2.10 லட்சம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 379 பேர் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர்.
தனியார் பள்ளிகளில் இருந்து 75 ஆயிரத்து 775 பேர் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர். அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.