சென்னை: ராணி மேரி கல்லூரியில் பப்ளிக் போலீஸ் என்ற தன்னார்வ அமைப்பின் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அமைப்பினை துவக்கி வைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான ஆண்டு தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து எந்தவித திட்டமும் இல்லை வழக்கமான கல்வி அலுவலர் அட்டவணையில் கூறப்பட்டுள்ளது போல் தேர்வுகள் நடைபெறும். வைரஸ் நோய்த் தொற்றினால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து சுகாதாரத் துறையின் அறிவுரைகளின் படியே முடிவெடுக்கப்படும்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ், ஆங்கில மொழித் தேர்வினை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத வராதது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களுக்கு என்ன காரணத்தால் வரவில்லை என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு இடைநின்ற மாணவர்கள் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் பள்ளிக்கு ஒரு சில நாட்கள் மட்டுமே வந்திருந்தனர்" என்றார்.
மேலும்,"அதுபோன்ற மாணவர்கள் தேர்வினை எழுத வராமல் இருந்திருக்கலாம். மாணவர்களுக்கு வாய்ப்பளித்தால் தேர்வினை எழுதுவார்கள் என்ற எண்ணத்தில் அவர்களுக்குத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது, அது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
2019 ஆம் ஆண்டு 49 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதாமல் இருந்தனர். அதன் பின்னர் கரோனா தொற்றால் மாணவர்களுக்கு முழுமையான தேர்ச்சி வழங்கப்பட்டது. தற்பொழுது பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது அதுபோன்ற மனநிலையில் மாணவர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்.
மேலும் மாணவர்கள் தேர்வு எழுதாததன் காரணம் குறித்து அவர்களின் பெற்றொர்களுடன் கலந்தாலோசிக்கப்படும். பொருளாதார காரணத்தால் தேர்வு எழுதவில்லையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று கலந்தாலோசனை மூலம் கண்டறியப்படும். மாணவர்கள் தேர்வு எழுதாத அன்று மதியமே மாணவர்களின் பெற்றோர்களிடன் ஆலோசனை செய்யப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த கட்டத்தில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மாணவர்களின் பள்ளி வருகை எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாயமான சென்னை மருத்துவர்!