சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வந்த வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து, வங்கக்கடலில் உருவான 'மிக்ஜாம் புயல்' தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை ஒட்டு மொத்தமாகப் புரட்டிப்போட்டு உள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்புயலின் தாக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக சிதைத்துள்ளது.
குறிப்பிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தன. இதில், சென்னையின் நிலை சொல்லி மாளாது. இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பணக்காரர் முதல் ஏழை வரை பாரபட்சமின்றி அவதியுற்றது தான் நிதர்சன உண்மை.
இந்த இக்கட்டான சூழலில் பலர் உதவிக்கரங்கள் நீட்டியதும் குறிப்பிடத்தக்கது. மழை நின்றாலும் அதன் தாக்கம் இன்னும் மக்களை வாட்டியே வருகிறது. இந்த நிலையில், வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கத் தமிழக அரசு சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை அம்பத்தூரில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் ஆகிய பகுதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தேங்கியுள்ள மழைநீரை வேகமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, அம்பத்தூர் உற்பத்தியாளர் சங்கத்தினருடன் மேற்கொண்ட ஆய்வுக்குப் பின்பு அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தொழிற்சாலைகளில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் மழை நீரால் பாதிப்படைந்து உள்ளது.
வருங்காலத்தில் இது போன்ற பாதிப்புகள் நிகழாமல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தொழிற்பேட்டையில் நுழைந்த வெள்ளத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இயந்திரங்கள் பழுதாகியதாகவும், உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்து உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த வகையில், அரசாங்கத்தால் என்னென்ன உதவிகள் அவர்களுக்குச் செய்து கொடுக்க முடியுமோ அதைச் செய்து கொடுப்போம். அதையடுத்து, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற, முடிந்தவரை வேகப்படுத்தி உள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூன்று நாட்களாக முடங்கி கிடக்கும் தென்சென்னை.. இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?