சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜூன் மாதம் 1 ஆம் தேதி, 6 முதல் 12 ம் வகுப்பு வரையிலும், அதே போன்று ஜூன் மாதம் 5ஆம் தேதி 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திட்டமிட்டவாறு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!
ஆலோசனைக்கு பின்னர் பேசிய அவர், “பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைப்பது குறித்து யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாணவர்களால் வகுப்பறையின் சிரமமின்றி அமர முடியாது. இதனால் அனைத்து மாவட்ட கல்வி அலுவர்களுடனும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரிடமும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு 2 தேதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இருந்தால், அனைத்து வகுப்புகளுக்கும் தான் மாற்றம் இருக்கும்” என தெரிவித்து இருந்தார்.
மேலும், “பள்ளி விடுமுறை தினங்களை மாணவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள பயன்படுத்த வேண்டும். கோடை விடுமுறை தினங்களில் தனியார் பள்ளிகள் வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். 2023 - 2024 கல்வி ஆண்டு முதல் தமிழ் கட்டாய மொழிப்பாடம் விதியினைப் பின்பற்றி தனியார் பள்ளிகள் தமிழ் ஆசிரியர்களை நியமித்து உள்ளார்களா என நேரடி ஆய்வு நடத்துவேன்.
மதிப்பெண்களை முன்னிறுத்தி தனியார் பள்ளிகள் டாப்பர் லிஸ்ட் பதாகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். இது மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். எந்த மாணவரையும் மனதளவில் பாதிக்காமல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்குங்கள்” என தெரிவித்து இருந்தார்.
மேலும், வரும் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இருக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் விடுமுறை நாட்களை ஈடு செய்ய அவ்வப்போது சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜப்பானில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செங்கல்பட்டில் ஆலை விரிவாக்கம் செய்ய ஒப்பந்தம்!