சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், மிக்ஜாம் புயல் உருவாகிக் கடந்த சில நாட்களாகச் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையால் புரட்டிப் போட்டது. இதனால் பல நீர்நிலைகள் நிரம்பி, மழை நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.
வீடுகளில் தண்ணீர் புகுந்த காரணத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன் ஒருபகுதியாக, மழை வெள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து பணிகளைத் துரிதப்படுத்தினார்.
மேலும், மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்யவும், நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள அமைச்சர்களைச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச 05) நியமனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் குறித்தும், மழை பாதிப்புகள் குறித்தும் சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் மாநில பேரிடர் செயல்பாட்டு மையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஷெனாய் நகர் அம்மா அரங்கத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்தார். அப்போது, சுகாதார வளாகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையின் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறும், மருத்துவ பரிசோதனை முகாம் நடத்துமாறும் உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன் பிறகு, வில்லிவாக்கம் பாரதி நகரில் தேங்கியிருக்கும் மழைநீரை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அதிக மின் திறன் கொண்ட மோட்டார்களைப் பயன்படுத்தி நீரை உடனடியாக வெளியேற்றுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
மாமன்ற உறுப்பினர் ஜெயின் அலுவலகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் உணவுக் கூடத்தையும் பார்வையிட்டார். அதன் பின்னர், கே.கே நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!