சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக 2022 - 2023ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்விசார் மன்ற செயல்பாடுகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்களை, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல உள்ளார்.
இந்நிலையில், "சிறார் திரைப்பட விழா" போட்டியில் வெற்றி பெற்று இன்று (நவ. 2) ஜப்பானுக்கு தங்களின் பயணத்தைத் தொடங்கி, நவம்பர் 10 வரை பயணிக்க உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அன்பழகனார் கல்வி வளாகத்தில் சந்தித்து, பயணத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான கையுறை, பேக் உள்ளிட்ட உபகரணங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது மாணவர்களுடன் பேசிய அமைச்சர், "நீங்கள் எவ்வாறு இந்த பயணத்திற்குத் தேர்வாகியுள்ளீர்கள் என்பதை உங்களோடு படிக்கும் சக மாணவர்களுக்குச் சொல்லுங்கள். அடுத்த முறை அவர்களும் இதேபோல சென்று வர ஊக்கப்படுத்துங்கள். சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு அப்பா, அம்மாவாக நானே இருந்து பார்த்துக் கொள்வேன். பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம்.
திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் இந்த திட்டம் உட்பட பல்வேறு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்" என்று கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், "மாணவர்களுக்குப் படிப்பு மட்டுமே முக்கியமில்லை. ஆனாலும் இன்றைக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் எல்லாமே நிர்ணயிக்கப்படுகிறது.
மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பல்வேறு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், நமது தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்த 100 மாணவர்கள் ஜப்பான் மற்றும் தென்கொரியா நாட்டிற்குக் கல்விச் சுற்றுலாவுக்குச் செல்கின்றனர்.
பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக 2022-23ஆம் கல்வியாண்டில், கல்வி இணை, கல்விச்சார மன்ற செயல்பாடுகளுக்கான போட்டிகளில் பங்கேற்று, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மாணவர்கள், வெளிநாடு சென்று அங்குள்ள கலாச்சாரம் மற்றும் நாகரிகம் உள்ளிட்டவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
விமானத்தை அண்ணாந்து மட்டுமே பார்த்தும், விமான நிலையம் கூட செல்ல வாய்ப்பில்லாத இந்த குழந்தைகள் நாளை வெளிநாடுகளுக்குச் செல்ல உள்ளனர்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்நாடு மாநில பாரத சாரணர் சாரணியர் இயக்கத்தின் மாநில முதன்மை ஆணையராக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளியை நியமித்து அதற்கான உத்தரவை மாநில சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
இதையும் படிங்க: பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வாழ்த்து!