சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (ஆகஸ்ட் 12) காலை சேலத்தில் நடைபெற்ற பாரதி வித்யாலய சங்கத்தின் பவள விழா மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதனையடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு விழாவிற்காக காரிமங்கலம் வழியாக செல்லும்போது, அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் உடனடியாக அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அமைச்சருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், தனியார் மருத்துவமனையில் அமைச்சர் சுமார் 1 மணி நேரம் ஓய்வு எடுத்தார்.
மேலும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்பட பலர் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், பரிசோதனைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில், அங்கு அவர் உடல்நலம் பரிசோதனைக்குப் பிறகு எந்த வித பிரச்னையும் இல்லை என்றால் சென்னை புறப்படுவார் என திமுகவினர் தெரிவித்தனர்.
தற்போது, அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேல் வயிற்று வலி காரணமாக நாராயண ஹெல்த் சிட்டிக்கு அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். வலி நிவாரணிகள் மற்றும் உரிய மருந்துகள் மூலம் அவரது உடல் நிலை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. தற்போது அவர் உடல் நலமுடன் உள்ளார்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, நேற்றைய முன்தினம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின மாணவரை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தற்போது வரை 6 சிறார்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக நெல்லை மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, மாணவர்களின் மனநிலை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வீடியோ வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு உடல்நலக்குறைவு :பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி !