சென்னை: தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதுவகை ஒமைக்ரான் தொற்று போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவிவருகிறது. ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
இதனிடையே உலக சுகாதார அமைப்பு உருமாற்றம் அடைந்த புதிய கெரோனா வைரஸான பி.1.1.529 என்ற ஒமைக்ரான், மற்ற வேரியண்டுகளைவிட அதிக ஆபத்து கொண்டது என்று அறிவித்துள்ளது.இதன்காரணமாக, பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த சூழலில் ஒமைக்ரான் தொற்று அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவிலும் பரவ வாய்ப்பு இருப்பதால், அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது.
இதுகுறித்து இன்று விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலால் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது என விளக்கமளித்துள்ளார்.