சென்னை: பரங்கிமலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில், தகரி சிலம்பாட்டக் கழகம் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில சிலம்பப் போட்டியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் விழா மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “சிலம்பம் விளையாட்டை பழகுவதன் மூலம் மாணவர்கள் கவனம் செலுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். மாணவர்கள் படிப்பு, படிப்பு என்று இருந்து விடக் கூடாது. பெற்றோர்கள் சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் தங்கள் குழந்தைகள் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும். தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது.
வெளிநாடு பயணங்கள் சென்று இருந்தாலும் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர், கோடை விடுமுறையை நீட்டிக்கச் சொல்லி அறிவுறுத்தி இருந்தார். அதன் பிறகு மீண்டும் வெப்ப அலையின் காரணமாக பள்ளிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கோடை விடுமுறையானது நீட்டிக்கப்பட்டு உள்ளது” என கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டு மாணவர்கள் கலந்து கொள்ள இயலாதது தவறுதான். அந்த தவறை ஒப்புக் கொள்கிறோம். முறையான தகவல் பரிமாற்றம் செய்ய இயலாததன் காரணமாகவே, மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது.
தவறு செய்த உடற்கல்வி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இணை இயக்குநர் ஒருவரிடம் அது சார்ந்த விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், வருகிற 2023 - 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டின் மாணவர்கள் நிச்சயம் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு நான்கு மணி நேர பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. பாட வகுப்புகள் நடத்துவதற்கான பற்றாக்குறையை போக்குவதற்கு சனிக்கிழமைகளில் பாட வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பயிற்சியில் பாதிப்பு ஏற்படாதவாறும் மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்புகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார். முன்னதாக, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் கலந்து கொள்வதற்குரிய தகவலை சரியாக தெரிவிக்காததாக தமிழ்நாடு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய விளையாட்டு போட்டி விவகாரம்: முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் அதிரடி சஸ்பெண்ட்!