சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பொறியியல் சேர்க்கையில் சிறப்புப் பிரிவினருக்கான இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பொறியியல் கலாந்தாய்வின் முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இந்தப் பிரிவினருக்கு உள்ள 6,915 இடங்களில் சேருவதற்கு 141 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் அனைவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ் வழியில் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால் மாணவர்கள் அந்தப் பிரிவினை தேர்வு செய்ய விரும்புவதில்லை.
பொறியியல் படிப்பில் அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இளங்கலை மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், முதுகலை மாணவர்களுக்கு ரூ.18 ஆயிரமும கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு எந்தவித கல்விக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்றார்.