சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், சட்டப் படிப்பு மாணவர்களுடன் கருத்துகள் மற்றும் ஆலோசனை கேட்கும் கூட்டம் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஒடிசா மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் சத்ருகான புஜாரி, "புலம்பெயர் தொழிலாளர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். ஒடிசாவில் இருந்து சூரத், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு குடிபெயரும் தொழிலாளர்களை விட, தமிழ்நாட்டுக்கு தான் அதிகளவில் குடிபெயர்கின்றனர். கட்டுமானம் மற்றும் ஜவுளித்துறைகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பை இடைத்தரகர்கள் சுரண்டுகின்றனர். இந்த நிலை இந்தியா முழுவதும் நிலவுகிறது. அவர்களுக்கான மருத்துவம், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படும்போது மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
பின்னர் பேசிய தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பாஸ்கரன், "கரோனா காலத்தில் வேலை இல்லாத காரணத்தால் புலம் பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அது இந்தியாவின் நன்மதிப்பைக் கெடுத்தது. வரும் காலங்களில் அடிப்படைத் தேவைகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். தொழிலாளர் துறை சார்பில், தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்துள்ளது'' என்றார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய தன்னார்வலர்கள், ''புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் நடைபெற்றால், பாதிக்கப்பட்டவரின் மாநில மொழியில் புகார் அளிக்க ஏதுவான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான புதிய நீதிமன்றங்களை நிறுவ வேண்டும். மாநில அரசின் காப்பீடு கிடைக்காத புலம் பெயர் தொழிலாளர்கள் மத்திய அரசின் "ஆயஷ் மான் பாரத்" மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் சிகிச்சைகள் பெற மாநில அரசு அனுமதிக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை மாவட்ட அளவில் சேகரித்து, தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தினர்.