சென்னை போரூரில் தனியார் நிறுவன கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இதனால் இவர்கள் போரூர் துரைசாமி நகர்ப்பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஒன்று திரண்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போரூர் காவல் ஆணையர் சங்கர் நாராயணன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அதை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் காவல் துறையினர் வாகனத்தை சிறைபிடித்து இரும்பு கம்பி, கம்பு, கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்க முற்பட்டனர். அதுமட்டுமின்றி கற்கள் வீசி தாக்கியதால் இரண்டு காவல் துறையினருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து வடமாநில தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க...10 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் - டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு