சென்னை: 'மிக்ஜாம்' புயல் தாக்கத்தால் நேற்று இரவு முதல் சென்னையில் இடைவிடாமல் அதி கனமழை பெய்து வருகிறது. சென்னையில் சாலைகள், வீடுகள் என அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாம்பரம் அரசு மருத்துவமனை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
கனமழையின் காரணமாக ஜி.எஸ்.டி சாலை முழுவதுமாக மழை நீரில் மூழ்கியுள்ள நிலையில் ஜி.எஸ்.டி சாலையில் அமைந்துள்ள புறநகர் பகுதியின் முக்கிய மருத்துவமனையான தாம்பரம் அரசு மருத்துவமனை முழுவதும் மூன்று அடி அளவிற்கு மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மின் மோட்டார்களை கொண்டு மழை நீரை அப்புறப்படுத்த முயன்றும் பலன் அளிக்கவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக உள் நோயாளிகள் 100க்கும் மேற்பட்டோர் முதல் தளத்தில் மாற்றப்பட்டும் பிரசவ வார்ட்டில் இருந்து பதினைந்து பெண்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மழைக் காலங்களில் தாம்பரம் அரசு மருத்துவமனை பாதிக்கப்பட்டு வருவதால் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வேளச்சேரியில் 40 அடி அஸ்திவார பள்ளத்தில் விழுந்த கட்டிடம்; உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்!