சென்னை: ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், பிரபாகரனுக்கு ஆதரவாகவும் பேசியதாக கருங்கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஈரோடு மாவட்ட முதலாவது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கொளத்தூர் மணி, மணியரசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சாட்சிகளுடைய வாக்குமூலங்களில் போதிய முகாந்திரம் இல்லை என்றும் குற்றப்பத்திரிகையை ரத்துசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த வழக்கை இன்று (ஜனவரி 20) விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், இருவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வாடகை பாக்கி ரூ.52 லட்சம் செலுத்துக: 'அண்ணா நகர் கிளப்'புக்கு கெடு...!