திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 14 பேர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 12 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில், அந்த கட்சியில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் எனவும், மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் போட்டியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், கூட்டணிக் கட்சி சின்னத்தில் போட்டியிடும் தோழமை கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்காமல் தேர்தல் அலுவலர் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் சின்னம் ஒதுக்கும் நடைமுறைகள் முடிவடைந்துவிட்டதால், மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்த தேர்தலுக்குள் முடிவெடுப்பது சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் முடிந்தபிறகு, வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.