சென்னை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சேத்துமடை அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருந்த மதன் என்பவர் 2013 ஆம் ஆண்டு, அவருடைய பணி காலத்தின்போது மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து, கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்கக் கோரி, அவரது மனைவி விண்ணிப்பித்திருந்தார்.
இதனிடையே மாரடைப்பால் இறந்த மதனின் மனைவி விபத்தில் சிக்கி நடமாட முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, கனவரின் வேலையை தனது மகள் சனிதா-விற்கு வழங்கக் கோரி கோவை மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பித்தார். அவரின் கோரிக்கையை மாவட்ட கல்வி அதிகாரி நிராகரித்ததை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் உறுதி செய்தார்.
இதனை எதிர்த்து சனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "என் கனவன் பணியில் இருக்கும் போதே மாரடைப்பால் இறந்துவிட்டார். அதனால் அவரது பணியை கருணை அடிப்படையில் எனக்கு வழங்குமாறு விண்ணப்பித்திருந்த நிலையில், எதிர்பாரத விதமாக எனக்கு விபத்து ஏற்பட்டு நடமாட முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, என் கனவரின் வேலையை என் மகளுக்கு மாற்றிக் கொடுக்க விண்ணப்பித்திருந்தேன்.
ஆனால், விண்ணப்பிக்கப்பட்ட அந்த விண்ணப்பத்தை மாவட்ட கல்வி அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. இதனை மறுபரிசீலனை செய்து எனது கனவரின் பணியை கருணை அடிப்படையில் என் மகளுக்கு வழங்கு உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு இன்று(நவ.4) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சனிதா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் கருணை அடிப்படையில் பணி வழங்க கோரிய அவரது மனுவை பரிசீலிக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், மனுதாரரின் தாய் விபத்தில் சிக்கி அவரால் பணி செய்ய முடியாத நிலையில், அவரது மகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி விண்ணப்பித்ததில் தவறு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் பணியில் இருக்கும் நபர் திடீரென உயிரிழக்கும் பட்சத்தில், அவரது குடும்பம் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் கருணை அடிப்படையில் வேலை வழங்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள நீதிபதி மஞ்சுளா, இந்த உன்னத திட்டத்தை குறுகிய காரணங்களைக் கூறி நீர்த்துப்போக செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கால சூழல் மாறியதற்கு ஏற்ப அரசு முடிவெடுத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள நீதிபதி தகுதியின் அடிப்படையில் மனுதாரருக்கு ஆறு வாரங்களில் பணி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: "கோயில் அறங்காவலர்கள் தங்களது வாகனங்களில் பெயர் பலகை பொருத்தக் கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்!