சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி இடைநீக்கம்செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்புச் சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய விசாகா குழு (Vishaka Committee) அமைக்கப்பட்டது.
இந்தக் குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிராகக் குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தனக்கு வழங்கவில்லை
அந்த மனுவில், "விசாரணைக் குழுவை மாற்றியமைக்கக் கோரி உள்துறைச் செயலருக்கு மனு அளித்து, அது பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை தொடங்கிவிட்டதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்களைக் கூட தனக்கு வழங்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போதைய விசாகா குழுவைக் கலைத்துவிட்டு, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி இயற்கை நீதியைப் பின்பற்றி மீண்டும் முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" எனவும் மனுவில் கோரியுள்ளார்.
தூக்கில் போட வேண்டும்
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு மீண்டும் இன்று (நவ.22) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "விசாகா குழுவில் இடம் பெற்றுள்ள ஒரு அலுவலர் எந்தவித விசாரணையுமின்றி தன்னை (முன்னாள் சிறப்பு டிஜிபியை) தூக்கில் போட வேண்டும் எனப் பேசி உள்ளதாகவும், விசாகா கமிட்டி நியாயமான முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
வாழ்வாதாரத்திற்கு ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள நிலை
அதேபோல வாழ்வாதாரத்திற்கு ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து இதுவரை தனக்குப் படித் தொகை வழங்கப்படவில்லை என்பதால் அதனை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இதற்குத் தமிழ்நாடு அரசைப் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி பார்த்திபன், விசாகா குழுவின் அறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞருக்கு (Advocate General of TN ) உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: 'அந்த எண்ணத்தில்தான் செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளேன்' - முதலமைச்சர்