சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு போராடிய மக்கள் மீது காவல்துறையினர் மே மாதம் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கை அடிப்படையில், சம்பவத்தின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த V.வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ், மாவட்ட எஸ்.பி.யாக இருந்த P.மகேந்திரன், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக திருமலை என்ற காவலர் மீது போடப்பட்ட குற்றப்பத்திரிக்கையை சிபிஐ நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதனால், உரிய விசாரணை செய்ய தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும். இதுவரை 770 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டும் தவறு செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என வேதனை தெரிவித்தார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கரிஞர், கடந்த 2018இல் 240 வழக்குகள் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்டது. அதில் 202 வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டது. 38 வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. அனைத்து வழக்குகளும் உரிய விசாரணைக்கு பிறகே முடித்து வைக்கப்பட்டது. சிபிஐ நீதிமன்றத்தால் டிச 07ஆம் தேதி திருமலை என்ற காவலர் மீது போடப்பட்ட குற்றப்பத்திரிக்கை தீவிர விசாரணைக்கு பிறகே நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது என தெரிவித்தார்.
இதையடுத்து, அருணா ஜெகதீஷன் ஆணையத்தின் அடிப்படையில் விசாரணை செய்ய வேண்டாமா? சிபிஐ விசாரணை முடிந்து விட்டால் வழக்கு விசாரணையை நிறுத்திவிடலாமா? கமிஷன் பரிந்துரைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது கைவிடப்பட்டதா? அரசு பரிந்துரைப்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அதன் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 19ஆம் தேதி ஒத்திவைத்தனர்.