சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா மீதான புகாரில் 8 வாரங்களில் ஆரம்பகட்ட விசாரணை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அரவிந்தக்க்ஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா தொடர்பாக மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா என்கிற சத்யநாராயணன், சென்னை தியாகராய நகர் தொகுதியில் 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பு 2 கோடியே 78 லட்சம் ரூபாய் என கூறியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சட்டத்துக்கு புறம்பாக தனது சொத்துக் கணக்கை மறைத்து மனைவி மற்றும் மகள் பெயரில் வாங்கிய சொத்துக்களை மறைத்து உள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமை சட்ட கீழ் விண்ணப்பித்தேன்.
இதையும் படிங்க: கோடீஸ்வர எம்.எல்.ஏக்களின் பட்டியல் வெளியீடு.... யார் முதல்ல தெரியுமா?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சத்யநாராயணன் சொத்து மதிப்பை வெளியிடுமாறு நான் கேட்டபோது, அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் 13 கோடியே 2 லட்சம் ரூபாய் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தனது சொத்து மதிப்பை மறைத்து சத்யா தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று (ஜூலை 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் ஆரம்பகட்ட விசாரணை முடிந்த நிலையில், முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து விசாரணையை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.
இதையும் படிங்க: நடுவானில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காரைக்குடியைச் சேர்ந்த இளைஞர் கைது!