சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியில், போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜேந்திரன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், இந்த திட்டத்திற்காக 190 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தின் சிறப்பு தாசில்தாராக நியமிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரி 20 கோடி அளவிற்கு இழப்பீடு வழங்கியுள்ளதாகவும், மீதமுள்ள தொகை எப்படி வழங்கப்பட்டுள்ளது எனக் கண்டறிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
190 கோடி ரூபாய் எவ்வாறு வழங்கப்பட்டது? என அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று (டிச.20) விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா உடல் நலன் சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராகவில்லை.
முன்னாள் அரசு அதிகாரிக்கு கடும் எச்சரிக்கை: சிபிசிஐடி தரப்பில் இந்த விவகாரத்தில் இரண்டு வழக்குகள் பதியபட்டுள்ளதாகவும், 15 நபர்கள் கைது செய்யபட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 18 கோடியே 57லட்சத்து 47 ஆயிரத்து 128 ரூபாய் மீட்கப்பட்டு, இந்த வழக்கின் கணக்கில் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 2 கோடி ரூபாயும் வசூலிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா கட்டாயம் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை மட்டும் நாளை மறுதினம் (டிச.22) தள்ளிவைத்துள்ளார்.
தவறாக இழப்பீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் எவரும் தப்பிவிடக் கூடாது என சிபிசிஐடி காவல்துறையை அறிவுறுத்திய நீதிபதி, இழப்பீட்டை வசூலித்தது மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்த விசாரணையின் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டு பிரதான வழக்கை வரும் ஜனவரி 9ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: பாமர மக்களுக்கு புரியும் வகையில் மருத்துவ காப்பீட்டை வடிவமையுங்கள் - உயர் நீதிமன்றக்கிளை