சென்னை: சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்துக்காக பல்வேறு நபர்களிடம் இருந்து 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வசூலித்து, சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜனிடம் வழங்கியதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு எவருக்கும் பணி நியமனம் வழங்கவில்லை எனக் கூறி குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். சரோஜாவிடம் 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், அவரது கணவரிடம் 50 லட்சம் ரூபாயும் கொடுத்தாக குணசீலன் புகார் கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் தங்களை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High court) மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், பணிநியமனம் வழங்குவதாக கூறி எவரிடமும் பணம் பெறவில்லை. புகார் அளித்த குணசீலன் தங்கள் உறவினர் என்றும் குடும்ப பகை காரணமாக தங்களுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்துணவு அமைப்பாளர்கள், தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் நியமிக்கப்பட்டதாகவும், இந்தப் புகார் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் ஏற்கனவே தங்களை விசாரித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் (Justice Nirmal Kumar) முன் இன்று (நவ.19) விசாரணைக்கு வந்தபோது, பதிலளிக்க அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கால அவகாசம் கோரினார்.
இதை ஏற்று விசாரணையை நவம்பர் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: மருத்துவம் இந்தியா வெற்றி பெற வேண்டிய துறை - பிரதமர் மோடி