சென்னை: கோவை மாவட்டத்தில், சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக கணேசன் என்பவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
கோவை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரையும், இரு மருத்துவர்களையும் மீண்டும் அழைத்து குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி, குற்றம் சாட்டப்பட்ட கணேசன், சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
ஆனால், போக்சோ சட்டப்படி பாதிக்கப்பட்ட சிறுமியை, மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க முடியாது எனக் கூறி, கணேசனின் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேஜரான பிறகு விசாரிக்கலாம்
இந்த உத்தரவை எதிர்த்து கணேசன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் நடந்த போது மைனராக இருந்த பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது மேஜராகி விட்டதால் அவரை விசாரிக்க அனுமதிக்கலாம் எனவும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காதது குற்றம் சாட்டப்பட்டவருக்கு அநீதி இழைத்ததற்குச் சமம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மீண்டும் விசாரணை
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது, 21 வயதாவதால் போக்சோ சட்டத்தின் கீழான தடை செயல்பாட்டுக்கு வராது என்பதால், பாதிக்கப்பட்டவர் உள்பட மூன்று பேரையும் மீண்டும் அழைத்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார்.
நீதிமன்றம் உத்தரவு
இதுசம்பந்தமாக, 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி, சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த மனுவை பரிசீலித்து குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதுடன், 6 ஆயிரம் ரூபாயை தலா 2 ஆயிரம் வீதம் மூன்று சாட்சிகளுக்கும் வழங்க உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட தேதியில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய மனுதாரர் தரப்பில் தவறினால், அதன்பின், அவர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் வழக்கு: 'விரைந்து தண்டனை பெற்றுத் தருவோம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்