செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் நிலப் பிரச்னை தொடர்பாக கடந்த ஜூலை மாதம் நடந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்டோருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ இதயவர்மன் உள்பட 11 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அதில்,எம்எல்ஏ இதயவர்மன், மூன்று லட்சம் ரூபாயை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்,மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வேலூரில் தங்கியிருந்து, நகர காவல் நிலையத்தில் காலை, மாலை என இருவேளை கையெழுத்திட வேண்டும் எனவும், மற்ற 10 பேரும் திருப்போரூர் காவல் நிலையத்தில் தினமும் காலை மாலை என இருவேளை கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது..
ஜாமீன் உத்தரவில் விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தக் கோரி இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரும் தாக்கல் செய்த மனுக்கள் இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் விதித்த நிபந்தனையை எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரும் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி முதல் இதுவரை பின்பற்றி வருவதாகவும்,அதனை கருத்தில்கொண்டு நிபந்தனையை தளர்த்த வேண்டும் என கோரினார்.
அதே போல, நீதிமன்ற நிபந்தனைப்படி இதயவர்மன் மூன்று லட்சம் ரூபாயை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி விட்டதாகவும், இதயவர்மன் வேலூரில் தங்கி அங்குள்ள நகர காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் சூழலில்,சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 14 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கூட்டத்தொடரில் பங்கேற்க ஏதுவாக வேலூர் நகர காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என கோரினார்.
மனுதாரர்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எம்எல்ஏ இதயவர்மன் வேலூரில் தங்கி அங்குள்ள நகர காவல் நிலையத்தில் தினமும் காலை மாலை என இருவேளை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றியமைத்து திருப்போரூர் காவல் ஆய்வாளர் முன்பு வாரம் ஒரு முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.
அதேபோல மற்ற 10 பேரும் திருப்போரூர் காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றியமைத்து வாரம் ஒருமுறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.