சென்னை: முரசொலி அலுவலக நிலம் தொடர்பான வழக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி, வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியலிடும்படி பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 13 ஆம் தேதிகளில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரி முரசொலி அறக்கட்டளை தரப்பில், 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், அரசியல் ரீதியாக இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. புகாரை கொடுத்தவரும் பட்டியலினத்தை சேர்ந்தவர் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த ஆணையத்தின் அப்போதைய துணை தலைவரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை என்று கூறி, வழக்கிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். அதன் பின் இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியலிடும்படி பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்
இதையும் படிங்க: அம்பானி வீட்டு விருந்தில் கரன்சி நோட்டுடன் உணவு பரிமாறப்பட்டது ஏன் தெரியுமா?