சென்னை: சமீபத்தில் தமிழ்நாடு பாரத ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பாரதிய ஜனதா கட்சியில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொடிக்கம்பங்கள் நட இருப்பதாகப் பாரதிய ஜனதா தரப்பில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிடக் கோரி அரவிந்தாக்ஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "பல்வேறு அரசியல் கட்சிகளை எதிர் மனுதாரர்களாகச் சேர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்றும், சட்ட வரம்புக்கு உட்பட்டு மட்டுமே அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டி உள்ளார். பாஜக கொடிக்கம்பம் நட அனுமதித்தால், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதுடன், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது." என மனுவில் கூறியுள்ளார்.
மேலும், அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என்றும், அரசு எந்த ஒரு அறிவிப்பையும் பிறப்பிக்காதது ஆச்சரியம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், இது தொடர்பாக உள்துறை செயலாளருக்கும், டிஜிபிக்கும் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெறும் அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே விளம்பரப் பலகைகள் வைப்பது, கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், எந்த விவரங்களும் இல்லாத மனுவை ஏற்க முடியாது எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொத்துக் குவிப்பு வழக்கு: இறுதி விசாரணை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!