சென்னை: அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 2010-11ஆம் ஆண்டுகளில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல், புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்காக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று (அக்.19) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில், உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 372 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நேரடியாக நிரப்புவது தொடர்பான வரைவு அறிவிப்பாணை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், '69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் எனவும் ஏற்கனவே, தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு தேர்வில் 5 சதவீத சலுகை மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் கூடுதல் மதிப்பெண்களும் வழங்கப்படும்' எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வரைவு அறிவிப்பாணை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த வரைவு அறிவிப்பாணையின் அடிப்படையில், 372 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பாணையை வெளியிட்டு, மூன்று மாதங்களில் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதே சமயம், இறுதி தேர்வுப் பட்டியலை நீதிமன்ற உத்தரவில்லாமல் வெளியிடக்கூடாது எனவும், தேர்வுப் பட்டியலை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2024 ஜனவரி கடைசி வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது? -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!