சென்னை: தமிழ்நாட்டில் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல்செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் உள்ள கருவேலமரங்களை அகற்ற உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் சதீஷ்குமார், நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று (பிப்ரவரி 16) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுவரை 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், வேருடன் அவற்றை அப்புறப்படுத்துவது தொடர்பான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அரசுத் தரப்பில் அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைச் செயலர் சுப்ரியா சாஹு, கிராம மக்கள் கருவேலமரங்களை விறகாகப் பயன்படுத்துவதாகவும், செங்கற்சூளைகள் போன்ற ஆலைகளும் இதை எரிபொருளாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கருவேல மரங்களின் பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு உறுப்பினர், பசுமைக்காகவும், வாழ்வாதாரத்துக்காகவும் இந்த மரங்கள் வளர்க்கப்பட்டதாகவும், கருவேல மரங்களின் தழைகளைக் கால்நடைகள் உண்பதாகவும், அதிகளவில் உட்கொண்டால் மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்றார்.
இது சம்பந்தமாக அரசு நியமித்த குழுக்களின் அறிக்கையை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பசுமைக்காகவும், வாழ்வாதாரம் தருகிறது என்றால் இந்த மரங்களை அகற்ற அரசு ஏன் முடிவெடுத்தது எனக் கேள்வி எழுப்பினர்.
அப்போது, வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு, வனப்பகுதியில் இந்த மரங்கள் பிற மரங்களை வளரவிடுவதில்லை எனவும், யானைகள் போன்ற விலங்குகள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்றும் பாதிப்பில்லை எனக் கூற முடியாது எனவும் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து, நீதிபதிகள், கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், நிலத்துக்கு மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்துகிறது என்றனர். கருவேல மரங்களை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கருத்தில்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், உண்மையிலேயே இந்த மரங்களை அகற்றும் நோக்கம் அரசுக்கு உள்ளதா? இல்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.
ராஜஸ்தான் போன்ற மற்ற மாநிலங்கள் என்ன நடைமுறை பின்பற்றுகின்றன என ஆய்வுசெய்ய வேண்டும் எனவும் மற்ற மாநிலங்களில் இல்லாவிட்டால் தமிழ்நாடு முன்மாதிரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டை கருவேல மரங்களில்லாத மாநிலமாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இறுதியில், இந்த மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்துவிட்டதாகத் தெரிவித்த தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு சொந்த நிதியைப் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள், மார்ச் 16ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.