சென்னை: அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையில் நடத்தப்பட்ட நிலையில் ஜூன் 14ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ரத்தக்குழாய்களில் மூன்று அடைப்பு இருப்பதால், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது. இதனிடையே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு முதலில் ஜூன் 28 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. பின்னர், 8 நாட்கள் காவல்துறை விசாரணைக்கு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் காவேரி தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சொந்த செலவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தில் அமர்வில் இன்று (ஜூன் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய உரிமை உள்ளது. கைது நடவடிக்கைக்கு உரிய விளக்கம் அளிக்காமல் சட்டவிரோதமாக நடைபெற்றதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது.
சட்டப்படி விளக்கம் அளித்து கைது நடவடிக்கை செய்யப்பட்டால், ஆட்கொணர்வு மனுவும் (Habeas corpus), ஜாமீன் கேட்டு வழக்கு தொடர முடியாது. விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்பது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்குக்கு பொருந்தாது என அமலாக்கப்பிரிவு கூற முடியாது. குற்ற விசாரணை முறைச் சட்ட பிரிவை பின்பற்றாதது அடிப்படை உரிமையை மீறியது என்பதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என வாதம் செய்தார். உரிய விளக்கம் அளிக்காமல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்காமல் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகை உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் ரத்து செய்துள்ளது.
சம்மன் கொடுக்காமல் விசாரித்து சட்டப்படி குற்றம்: கடந்த ஜூன் 13ஆம் தேதி காலை 9.30 மணிக்கு செந்தில் பாலாஜியின் இல்லத்தில் நடைபெற்ற விசாரணை ஜூன் 14 அதிகாலை 1.58 வரை தொடர்ந்தது. சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு அளித்துள்ளார். கைது செய்யப்படுவதற்கு முன்பாகவே உரிய மெமோ கொடுக்காமல் வீட்டு காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டது சட்ட விரோதமானது. கைதுக்கான காரணங்களை உரிய மெமோ வழங்காமல் செய்துள்ளனர். பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் வழக்கில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணையை ரத்த செய்து உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை விசாரணை குறித்து செந்தில் பாலாஜியிடம் நேரடியாக விளக்கம் கேட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி, நீதிமன்ற காவலில் அடைக்க முதலில் உத்தரவிட்டார். அதன் பிறகே, காவல்துறை விசாரணைக்கு அனுமதித்தார் என வாதம் செய்தார். மேலும் மனுதாரர் தரப்பில், அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து உடல்நிலை சரியல்லை என சொல்லும் ஒருவர் அறுவை சிகிச்சை வரை செல்ல முடியுமா? என தெரிவித்தார்.
அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அமலாக்கத்துறைக்கு சில பிரச்னைகள் இருந்தாலும் ஒருவரது உடல்நிலையை பற்றி கொச்சைப்படுத்துவது சரியானதாக இருக்காது என தெரிவித்தார். இதையடுத்து, அமலாக்கத்துறை தரப்பு வாதத்திற்காக வழக்கை ஜூன் 27ம் தேதி நீதிபதகள் தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: இலாகா இல்லாத அமைச்சரால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது: செந்தில் பாலாஜிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு!