தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷையன் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் பிரேசில் நாட்டில் உள்ள மாட்டா கிரோஸோ கூட்டாட்சி பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இரண்டு பல்கலைக்கழகமும் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும் மருத்துவக் கல்வியில் பங்கேற்பதற்கும் மாணவர்கள் இரு நாடுகளிடையே பரிமாற்றம் செய்து கல்வி கற்கவும் பயனுள்ளதாக அமையும்" என்று தெரிவித்தார்.
மருத்துவ ஆராய்ச்சி செய்ய சாதகமான நிலையை ஏற்படுத்துமா?
மேலும் அவர், "பிரேசில் தென் அமெரிக்காவில் மிகப்பெரிய நாடாக இருப்பதுடன், உலகளவில் ஐந்தாவது பெரிய நாடாக உள்ளது. பிரேசில் நாட்டில் மக்களுக்கான மருத்துவம், சுகாதாரம் வழங்கும் அமைப்பு அந்த நாட்டின் அரசால் பிரதானமாக நடத்தப்படுகிறது. அங்கு ஒற்றை சுகாதார முறையை பின்பற்றிவருகின்றனர். பிரேசில் நாட்டில் உள்ள மக்கள் தொகை 230 மில்லியன் எனக் கூறுகின்றனர். மிகப்பெரிய நாடாக இருந்தாலும் அனைத்து மக்களுக்கும் எந்தச் செலவும் இல்லாமல் அரசே மருத்துவம், சுகாதாரத்தினை அளிக்கிறது.
பிரேசில் நாட்டில் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் வல்லரசாக வரும் வகையில் முன்னேற்றம் இருக்கிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது. எனவே இந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும்போது அது நமது மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறோம்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?
ஃபெடரல் யூனிவர்சிட்டி ஆஃப் மாட்டோ கிரோஸோ பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போதுதான் அக்டோபர் 7ஆம் தேதி அந்தப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தராக நானும், மாட்டோ கிரோஸோ கூட்டாட்சி பல்கலைக்கழகத்தின் சார்பில் ரெக்டார் பேராசிரியர் மெரியன் தெராசா ஆகியோரும் கையொப்பமிட்டோம். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும்.
தொற்றுநோயை தடுக்க ஏதேனும் வழி உண்டா?
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடாக இந்தியாவும் பிரேசிலும் உள்ளன. இதனால் தொற்று நோய்கள் இரு நாட்டிலும் ஒரே மாதிரியான நிலையில் இருக்கின்றன. பிரேசிலிலும் கொசுப் பிரச்னையால் மலேரியா, தொழுநோய் போன்றவை உள்ளது. ஹெப்படைட்டிஸ், காசநோய் போன்றவை அந்த நாட்டிலும் இருக்கிறது.
இதுபோன்ற நோய்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல்படுவதால் நமது மக்களுக்கு நாம் அளிக்கும் பங்களிப்பும் சிகிச்சையும் அதிகமாக இருக்கும். பிரேசில் நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் குடும்பமாக வருகின்றனர்.
அவர்களுக்கு தேவையான மருத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அங்கு சிகிச்சைப் பெறுபவர்கள் மீது தொழுநோயாளி என்ற எந்தவிதமான பாகுபாடும் காட்டப்படுவது இல்லை. இதுபோன்ற சூழ்நிலையை நமது மாணவர்களும் பார்த்தால் மக்களுக்கு செய்யும் தொண்டு விரிவடையும் என நம்புகிறோம்" என்று கூறினார்.