தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தினை தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு 1992ஆம் ஆண்டு கிண்டியில் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது. இந்த நிலத்திற்கான கிரையத் தொகையை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு நிலத்தை ஒதுக்கீடு செய்யும்போதே அரசு அதற்கான தொகையை செலுத்திவிட்டு, நிலத்தை பல்கலைக்கழகத்திற்கு மாற்றம் செய்து அளிக்கவில்லை.
ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு நிலம் கைமாறும்போது அதற்கு உரியத் தொகையை மாநில அரசே செலுத்தி அந்த இடத்தை மற்றொரு துறையின் பயன்பாட்டிற்கு அளித்துவருவது வழக்கம்.
இந்த நிலையில், கிண்டியில் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிலத்திற்கான நிலுவைத் தொகையை மக்கள் நல்வாழ்வுத் துறை தற்போதுவரை வருவாய்த் துறைக்கு செலுத்தாமல் இருந்துள்ளது. அந்த நிலத்திற்கான 87.45 கோடி ரூபாய் தற்போது நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2012ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு மாநில வருவாய் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அன்றைய அரசு நிர்வாகத்திலிருந்து உரிய பதில் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு மாநில வருவாய் நிர்வாகத் துறை மீண்டும் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் வரும் 15ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திடமிருந்து பதில் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர் கூறுகையில், பல்கலைக்கழகத்திடமிருந்து வருவாய்த் துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை பெறுவதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் கேட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பெயரில் இயங்கிவரும் பல்கலைக்கழகத்திற்கான நிலத்திற்கு உரியத் தொகையை அரசு செலுத்தாமல் உள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.