சென்னை: மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12ஆம் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னதாக நீர் வளத்துறை அமைச்சர், வேளாண்மை மற்றும் விவசாயிகள்துறை அமைச்சர், வேளாண்மைத்துறைச் செயலாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அணையின் தற்போதைய நீர் மட்டம் டெல்டா பாசன விவசாயிகளின் தேவை ஆகியவற்றைக் குறித்து விவாதித்து, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்தார். முன்னதாக மேட்டூர் அணையின் நீர் மட்ட அளவு இன்றைய நிலவரப்படி 97.13 அடியாகவும் நீர் இருப்பு 61.43 டிஎம்சி ஆகவும் இருந்தது.
வெளியான நீர் திறப்பு குறித்த அறிவிப்பு:
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், 'நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12ஆம் தேதி முதல் பாசனத்திற்காக திறந்து விடப்படும்.
இதனால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு முழுமையாகச் சென்று சேரும் வகையில், தூர்வாரும் பணிகளை விவசாய பெருங்குடி மக்களை கலந்தாலோசித்து இந்த ஆண்டு முறையாக மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி டெல்டா மாவட்டங்களில் ரூபாய் 65.11 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து பகுதி டெல்டா பாசன விவசாயிகளுக்குத் தேவையான அளவு தண்ணீர் கொண்டு சேர்க்க இயலும். இவ்வாண்டு விவசாயப் பணிகளுக்கு தேவையான விதை நெல், உரங்கள், பூச்சி மருந்து மற்றும் இதர வேளாண் இடுபொருட்கள் போதுமான அளவில் இருப்பில் வைக்கவும்; வேளாண்துறை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது' என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'போராளியின் வழியில் வெற்றிப் பயணம்' - கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை