அனைத்து இந்திய தனியார் பள்ளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மனோகர் ஜெயக்குமார் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'ஒரு சில பெரிய மெட்ரிக் பள்ளிகளைத் தவிர்த்து 90% மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக் கல்வி கட்டணங்களை அந்தந்த ஆண்டுகளுக்கு செலுத்துவதில்லை. பலர் பள்ளிகளுக்கு 2018-19ஆம் கல்வி ஆண்டுக்கான கட்டண பாக்கியை செலுத்தாமல் உள்ளனர்.
இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக 2019-20ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் பாக்கியுள்ளது. மேலும் அனைவருக்கும் கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ், மாணவர்கள் சேர்க்கப்பட அதற்கான கட்டணத்தை 2019-20ஆம் ஆண்டிற்கு அரசு இன்னும் பள்ளிகளுக்கு வழங்காமல் உள்ளது.
மெட்ரிக் பள்ளிகளின் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. 2002ஆம் ஆண்டு முதல் மெட்ரிக் பள்ளிகள் புதிதாகத் தொடங்க வேண்டும் என்றால், நிர்வாக பங்குத் தொகையாக அரசு கணக்கில் செலுத்தப்பட்டு, இருப்புத் தொகையாக வழங்கியுள்ளது. அதன் வட்டியை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம், அதற்கு செலவு செய்து வருகின்றது. தற்போது மெட்ரிக் பள்ளிகள் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது.
மேலும் மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்கும்போது, நிர்வாக பங்குத்தொகை செலுத்தப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும், தற்போது மெட்ரிக் பள்ளிகளின் பெற்றோர்கள் இரண்டு ஆண்டுக்கான கட்டண பாக்கியை வைத்திருப்பதாகவும், அரசு தர வேண்டிய அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டத்திற்கான பணத்தை தராததாலும் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத நிலையில் உள்ளது.
அதனால் வரும் கல்வி ஆண்டில் பள்ளி சீரமைப்பு செய்ய இயலாத நிலை உள்ளது. அதனால் நிர்வாக பங்குத் தொகையிலிருந்து பள்ளிகளுக்கு கடன் வழங்க வேண்டும். மேலும் பள்ளி திறக்கப்பட்டு பெற்றோர்கள் பழைய பாக்கிகளை செலுத்திய பின்னர் பள்ளி நிர்வாகங்கள் கடனைத் திருப்பி செலுத்திவிடும்' என அதில் கூறியுள்ளார் .
இதையும் படிங்க...மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு - முதலமைச்சர் இல்லம் நோக்கி புறப்பட்ட 5 சிறுவர்கள்!