சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து வரும் நாட்களில், இந்திய கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
இதேபோல், வடதமிழக மற்றும் புதுவை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் செப்டம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது" என சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பில் தெரிவித்து இருந்தது.
மழைப்பதிவு: நீலகிரியில், அவலாஞ்சியில் அதிகபட்சமாக 5 செ.மீ மழையானது பதிவானது. இதேபோல் கோவை, சின்னக்கல்லார், மகாபலிபுரம், சோலையார், ஆகிய இடங்களில் 4 செ.மீ மழையானது பதிவானது. வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கடலூர், கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), எமரால்டு (நீலகிரி), BASL மணம்பூண்டி (விழுப்புரம்) தலா 3 செ.மீ மழை பதிவானது என்று சென்னை வானிலை மையம் இன்று (செப்டம்பர் 12ஆம் தேதி) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.