சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (நவ. 13) செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "வட தமிழ்நாட்டை ஒட்டிய பகுதிகளில் 3.6 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன்கூடிய கனமழை பெய்யும்.
அதே போன்று சேலம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேலும் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
நவம்பர் 14: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், நீலகிரி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக்கடல், அந்தமான், தாய்லாந்து கடற்கரைப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதனால் இன்று, நாளை குமரி, மன்னார் வளைகுடா பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும் நவம்பர் 16, 17ஆம் தேதிகளில், மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். ஆகையால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இது புயலாக மாற தற்போதைக்கு வாய்ப்பில்லை.
வட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடனும், ஆந்திராவில் அதிக மழையும் நீடிக்கும். வட தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் வழக்கமாகப் பெய்யும் 27 செ.மீ. மழை சராசரியாக கிடைக்கும்.
இந்த முறை 42 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 47 செ.மீ. சராசரியாக மழை பெய்யும். இந்த முறை சென்னையில் 82 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது இயல்பைவிட 75 விழுக்காடு அதிகம்" என்றார்.
இதையும் படிங்க: TN RAIN: கடலூர் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்