வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், நாகப்பட்டினம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 15 செ.மீ மழையும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 13 செ.மீ., மழையும், நீலகிரி மாவட்டம் குந்தா அணைக்கட்டில் 11 செ.மீ., மழையும், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 7 முதல் 9 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீச இருப்பதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் வடகிழக்கு பருவமழை 3 வாரங்களில் தொடங்கும் எனவும் மழையின் அளவு இயல்பாகவே இருக்கக்கூடும்" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!