பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்களை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்புகாரின் பேரில் மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து தன்னை யாரும் கைது செய்ய முடியாது என மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை, சைபர் கிரைம் காவல் துறையினர் நேற்று (ஆக.14) கைது செய்தனர்.
அப்போது அவர் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சென்னை அழைத்து வர கால தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்தநிலையில் சைபர் கிரைம் காவல் துறையினர் மீரா மிதுனை இன்று (ஆக.15) காலை சென்னை அழைத்து வந்தனர். அப்போது அவர், "எனக்கு 24 மணி நேரமும் உணவு கொடுக்கவில்லை, என் கையை காவல் துறையினர் உடைத்துள்ளனர். அராஜகம் நடைபெறுகிறது" என பேசியபடி சென்றார்.
மீரா மிதுனிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அன்று 'சவால்'... இன்று 'கதறல்'... மீரா ஆட்டத்தை அடக்கிய போலீஸ்