கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அமலிலுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் நிலையில், தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கரோனா தொற்றுப் பரவல் தீவிரமாகி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக ஞாயிற்று கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 23ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் 7ஆவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக்குப் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சென்னையைச் சேர்ந்த மருத்துவர்கள் நேரடியாகவும், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் காணொலி காட்சி வாயிலாகவும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவ சிகிச்சை குறித்த வழிமுறைகள், உயிரிழப்புகளை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள், பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
மேலும் இதில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் , தலைமைச் செயலாளர் க. சண்முகம் , மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ . ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி . பிரகாஷ் , மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர் .
இதையும் படிங்க: 'பொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை'- மருத்துவ நிபுணர் குழு தகவல்