சென்னை: உக்ரைனில் இருந்து திருப்பிய 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாமல் உள்ளனர். அவர்கள் இந்தியாவிலேயே தனியார் மருத்துவக்கல்லூரிகளில், குறைந்த கட்டணத்தில் படிப்பைத் தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் வெளிநாட்டுப்பிரிவு செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூறும்போது, 'வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள், வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்த பின்பு, இந்திய அரசு நடத்தும் தகுதித்தேர்வில் வெற்றிபெற வேண்டும். அதன்பிறகு இந்தியாவில் ஓராண்டு காலத்திற்குப் பயிற்சி மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.
அதற்குப்பிறகே அவர்கள் மாநில மருத்துவக்கவுன்சில்களில் பதிவை பெற்று, மருத்துவராகப் பணியாற்ற இயலும். இந்நிலையில் ஒன்றிய அரசு நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும், இந்தியாவில் பயிற்சி மருத்துவம் மேற்கொள்ள வாய்ப்பில்லாமல் ஏராளமான மருத்துவ மாணவர்கள் காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் ஏராளமான மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
அவர்கள் பயிற்சி மருத்துவத்தை மேற்கொள்வதற்கான இடங்களின் எண்ணிக்கை 10 விழுக்காட்டிலிருந்து 7.5 விழுக்காடாக தேசிய மருத்துவ ஆணையத்தால் 18.11.2021அன்று குறைக்கப்பட்டதே இதற்கு முக்கியக்காரணமாகும். இதனால், இந்த மாணவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி பெறுவதற்கான பயிற்சி மருத்துவர் இடங்களை 7.5 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக தேசிய மருத்துவ ஆணையம் உயர்த்திட வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவம் மேற்கொள்ள ஏற்கெனவே இருந்தது போல் ஒன்றிய அரசு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுரைப்படி தமிழ்நாடு அரசு 11 புதிய மருத்துவக்கல்லூரிகளிலும் வெளிநாட்டில் படித்த மாணவர்களுக்கு பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்வு கண்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த மாணவர்கள் பயிற்சி மருத்துவத்தை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேற்கொள்வதற்காக வசூலிக்கப்பட்டு வந்த ரூ 2 லட்சம் கட்டணமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத்தாக்குதலை தொடங்கியதால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பைத்தொடர முடியாமல் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் இந்தியாவிலேயே தனியார் மருத்துவக்கல்லூரிகளில், குறைந்த கட்டணத்தில் படிப்பைத் தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
கரோனா காலத்தில் பல்வேறு வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை ஆன்லைன் மூலம் படித்த மாணவர்களுக்கு, கூடுதல் உள்ளுறை பயிற்சியை வழங்கி, மருத்துவர்களாகப்பதிவு செய்ய உரிய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு விரைந்து எடுக்க வேண்டும். இம்மாணவர்களின் பிரச்னைகளுக்கு உரிய முறையில் தீர்வு காண வேண்டும்.
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கான தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற பின்னர் பயிற்சி மருத்துவத்தில் சேர இடம் கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் பயிற்சி மருத்துவத்தை முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காவிட்டால் மீண்டும் தகுதித்தேர்வை எழுத வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை நீக்க, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையம் 50 விழுக்காடு இடங்களுக்கு, தனியார் மருத்துவக்கல்லூரிக்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனக்கூறியுள்ளது. இதை எதிர்த்து தனியார் மருத்துவக்கல்வி நிறுவனங்கள் வழக்குத்தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சிறந்த வழக்கறிஞர்களை கொண்டுவாதாட வேண்டும். இந்நிறுவனங்களில் உள்ள 100 விழுக்காடு இடங்களுக்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளே கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்’எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் -பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்