சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பி.காளிதாசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மருத்துவ ஆய்வக நுட்புநர் நிலை-2 பணிகளுக்கு, அரசு மருத்துவமனைகளில் உள்ள 3000-திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலமாக எழுத்து தேர்வு வைத்து, காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.
மதிப்பெண் (Weightage Mark) அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப வழிவகுக்கும், அரசாணை எண் 401-ஐ ரத்து செய்ய வேண்டும். மாநில அளவில் பதிவு மூப்பு அடிப்படையில், ஆய்வக நுட்புநர் நிலை-2 பணியிடங்கள் நிரப்பும் நடைமுறை கடந்த 2017ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அரசாணை 401-ன் படி 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ DMLT படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப வழிவகை செய்யப்பட்டது.
இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் (weightage mark) முறையில் மதிப்பெண்கள் (fixed) நிலையாக இருப்பதால், முன்னேற்ற (improvement) வாய்ப்பு மறுக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் ஏராளமான லேப் டெக்னீசியன்கள் (lab technician), அரசுப் பணிக்குச் செல்லும் வாய்ப்பும் மறுக்கப்படும் நிலையுள்ளது. இது ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது.
மேலும், மருத்துவ ஆய்வக நுட்புநர் நிலை-2 நியமனத்தில் சம வாய்ப்பும் வழங்கப்படவில்லை. எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையை ரத்து செய்துவிட்டு, எழுத்துத் தேர்வு முறை மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும். கடந்த அக்டோபர் மாதத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில், கல்லூரி முதல்வர்கள் மூலம் தோராயமாக 500 பணியிடம் நிரப்பப்பட்டது.
நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, தற்காலிகப் பணி நியமனங்களை கைவிட வேண்டும். நிரந்தர அடிப்படையில் மட்டுமே பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், மருத்துவ ஆய்வக நுட்புநர்களுக்கான, கவுன்சிலை உடனடியாக அமைத்திட வேண்டும்.
மருத்துவத்துறை பணி நியமனங்களில், மாநில உரிமையை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மருத்துவ ஆய்வக நுட்புநர்களுக்கான புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். எம்.ஆர்.பி (MRB) கோவிட் செவிலியர்களின் பணிநீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். டயாலிசிஸ் டெக்னீசியன்கள், ரேடியோ தெரப்பிஸ்ட்டுகளையும் எம்.ஆர்.பி மூலமே நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆளும் கட்சி தான் வெல்லும் என்ற மாயையை கட்டமைத்துள்ளனர் - சீமான்