சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று (அக்.7) செய்தியாளர்களிடம் பேசிய கட்டடக்கலைத்துறை பேராசிரியை லிஜி பிலிப், "ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன் காவிரி ஆற்றில் கலக்கும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அசுத்தங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மழைக்காலம், மற்ற காலங்களில் காவிரியில் ஆய்வு மேற்கொண்டோம்.
கர்நாடகம், தமிழ்நாடு பகுதிகளில் உள்ள பள்ளிபாளையம், கரூர், மேட்டூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 11 இடங்களில் ஆய்வு செய்தோம். மனிதர்கள், விலங்குகளின் மருத்துவ கழிவுகள் அதிக அளவில் காவிரியில் கலந்து நீர் மாசடைகிறது.
மருத்துவ கழிவுகளால் நீரில் உற்பத்தியாகும் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை பயன்படுத்தினாலும் கிருமிகள் எளிதில் அழியாது. தேங்கி நிற்கும் கழிவு நீரில் உற்பத்தியாகும் கிருமிகள் மருத்துவத் தன்மைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும்.
தற்போதைய நிலையில் இது போன்ற கழிவுகளை அழிப்பதற்கான தொழில்நுட்ப வசதி இல்லை. நீர் மாசுபாட்டால் மனிதர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த ஆய்வின் இடைக்கால அறிக்கையை ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்திடம் அளிக்கப்படுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த ஆய்வு தொடரும். ஆய்வின் இறுதி முடிவுகள் தமிழ்நாடு அரசிடம் அறிக்கையாக சமர்பிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடுக’ - இபிஎஸ்