சென்னை: மருந்தாளுநர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 8) சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பிப்ரவரியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறையில் 1200 க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை மக்கள் நலன் கருதி மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூடுதல் மருந்தாளுநர் பணி
மேலும் பணியிடம் நிரப்பிட தடையாக இருந்து வரும் வழக்கினை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும், பெருகி வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களை ஏற்படுத்தி கொடுக்க சங்கத்தின் பிரதிநிதிகள் அரசுக்கு வலியுறுத்தினர்.
"வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு அரசு விதிகளின் படி முறையாக பணி நியமனம் செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக காத்திருக்கும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களை உடனடியாக பணிவரன்முறை செய்திட வேண்டும் எனவும், பொது சுகாதாரத்துறையில் துணை இயக்குநர் அலுவலக மருந்துக் கிடங்கில் 42 இடங்களில் தலைமை மருந்தாளுநர் பணியிடம் உருவாக்கிட வேண்டும்" எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
பணி நேரம்
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர் பணி என்பது மருத்துவருடன் இணைந்த பணியாகும். எனவே மருந்தாளுநர் பணி நேரம் ஏற்கனவே இருந்தது போல் காலை 9 மணியிலிருந்து 4 மணி வரை பணிக்கான அரசாணை 82-யை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கிடவும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு
அரக தாலுகா மற்றும் தாலுகா அல்லாத 110 மருத்துவமனைகளில் மருந்து கிடங்குகளை முறையாகப் பராமரித்திட தலைமை மருந்தாளுநர் பதவி உருவாக்கிட வேண்டும் எனவும், கரோனா தொற்றால் உயிரிழந்த மருந்தாளுநர், தலைமை மருந்தாளுநர் , மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு அரசு இழப்பீடு தொகையாக ரூ.50 லட்சம் வழங்கி அவர்கள் குடும்பத்திற்கு கருணை அடிப்படையிலான அரசு பணியினை வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத்தலைவர் மு.சுப்பிரமணியன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் உ. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 1,956 பேருக்கு கரோனா பாதிப்பு