தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வு முறை குறித்து விளக்கமளித்தார். மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் குறித்து சுதா சேஷய்யன் கூறிய ருசிகரமான பதில்கள் பின்வருமாறு:
ஊரடங்கு நேரத்தில் மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் கற்பிக்கப்படுகிறது?
தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 24ஆம் தேதி முதல் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. மருத்துவக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட முடியாது என்பது ஒருபக்கம் இருக்கிறது. இதற்குக் காரணம் மருத்துவத் துறை சார்ந்தவர்கள், மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்க்கின்றனர். ஆனாலும், கோவிட்-19 தொற்றால் ஒரு வகுப்பறையில் 200 முதல் 250 மாணவர்கள் அமர்ந்து படிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகவில்லை. இதனால், மாணவர்கள் படிப்பில் இடையூறு ஏற்படுவதுடன் சிக்கலும் ஏற்பட்டது. அதனை நிவர்த்தி செய்ய தொழில்நுட்பம் நமக்கு உதவியாக இருப்பதால் முன்பு போன்று ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டிய நேரம் குறைவாகவே இருக்கிறது.
இணையதளம், போன்ற பல்வேறு நவீன வசதிகள் மாணவர்களுக்கு உதவியாக இருக்கின்றன. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திலும் இந்தத் தொழில்நுட்பத்தை நாங்கள் மேற்கொண்டோம். மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு டிஜிட்டல் பிளாட்பார்ம் உருவாக்கினோம். அதில் அனைத்து மாணவர்களின் பெயரையும் இணைக்கும் வகையில் உருவாக்கியுள்ளோம். மாணவர்கள் படிப்படியாக அந்த டிஜிட்டல் தளத்தில் இணைந்தனர். அதேபோன்று ஆசிரியர்கள் ஒரு வீடியோ பதிவு அல்லது லைவ் வீடியோவுடன் டிஜிட்டல் தளத்தில் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்துவருகின்றனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் 40க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அந்தந்த கல்லூரியில் அதிகபட்சமாக 250 மாணவர்கள் இருக்கின்றனர். அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் மூலமும் கல்வி கற்பிக்கப்பட்டுவருகிறது. எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், துணை மருத்துவப் படிப்புகளில் நர்சிங் படிக்கும் மாணவர்களுக்கும் கூகுள் கிளாஸ் மூலம் 10 கல்லூரிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், பாடம் நடத்துவதற்குரிய திட்டத்தினை வகுத்து அதனடிப்படையில் பாடம் நடத்தப்பட்டுவருகிறது.
கோவிட்-19 தடுப்புப் பணியில் உள்ள பட்ட மேற்படிப்பு மாணவர்கள் படிப்பதில் சிரமம் இருக்கிறதா?
கோவிட்-19 தடுப்புப் பணியில் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு கருத்தியல் மற்றும் செய்முறை தேர்வு வகுப்புகள் தனித்தனியாக நடத்தப்படுவதில்லை. பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள்தான். எனவே, அவர்களுக்கு கிளினிக்கல் அடிப்படையில்தான் பாடம் இருக்கும். நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பது, ஆபரேஷன் தியேட்டரில் பார்ப்பது போன்றவற்றின் அடிப்படையில்தான் வகுப்புகள் நடைபெறும். அவர்களுக்கு ஒரு கால அட்டவணை நிர்ணயம் செய்து பாடம் நடத்த முடியாது. தற்போது கோவிட்-19 பணியில் சிகிச்சை முறைகளைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பொது முடக்கத்தால் மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு நடைபெறுவதில் மாற்றம் ஏதும் உள்ளதா?
பொது முடக்கத்தால் மருத்துவ மாணவர்களின் தேர்வில் கண்டிப்பாக காலதாமதம் ஏற்படும். ஏற்கனவே, மருத்துவ மாணவர்களுக்கான தேர்வில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பார்மசி மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும். ஆனால், தற்போது கோவிட்-19 தொற்றால் பார்மசி கவுன்சில் ஆப் இந்தியா தேர்வு நடத்த முடியாது என்று கூறியுள்ளது. முதல் பருவத் தேர்வு மார்ச் மாதம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நடைபெறவில்லை.
எனவே, இரண்டாம் பருவ தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும்போது அதனைச் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். அதேபோல் மூன்றாம் பருவ தேர்வினை நான்காவது பருவ தேர்வுடன் சேர்த்து வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. இதேபோல்தான் நர்சிங் கவுன்சில் ஆஃப் இந்தியாவும் கூறியுள்ளது. மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு தேர்வு எந்த மாதம் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து குறிப்பிடவில்லை. தேர்வு நடத்துவதற்கான தருணம் வருகின்றபோது நடத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். பட்ட மேற்படிப்பு மாணவர்கள் அனைவரும் தற்பொழுது கோவிட்-19 பணியில் உள்ளனர். அவர்களுக்கு ஜூலை 31ஆம் தேதி தான் இந்தப் பணி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது முடக்க காலத்தில் மாணவர்களின் படிப்பில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் அவர்களுக்கான தேர்வுகள் தாமதமாகின்றன.
மாணவர்களுக்கான செய்முறை தேர்வுக்காக கல்வியாண்டிற்கான காலத்தை நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறதா?
மாணவர்களுக்குரிய செய்முறை தேர்விற்காக காலத்தை நீட்டிப்பது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது. இந்த நோய் எவ்வளவு நாள் செல்லும் என்பது தெரியவில்லை. மாணவர்கள் எவ்வளவு நாள்கள் கழித்து கல்லூரிக்குத் திரும்பிவர முடியும் என்பதைப் பொறுத்துத்தான் கூற முடியும். மாணவர்கள் கண்டிப்பாக திரும்பிவந்த பின்னர் செய்முறை வகுப்புகள் நடைபெறும் என்பதை கூற முடியும்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: இடைத்தரகருக்கு பிணை மறுப்பு