சென்னையில் கரோனா வைரஸ் திருவிக நகர், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது, இருப்பினும் குணமடைந்தவரின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் தினமும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தினந்தோறும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகிறது .மே 8ஆம் தேதி முதல் இன்றுவரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 73 ஆயிரத்து 758 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. அதில் 36 லட்சத்து 23 ஆயிரத்து 327 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். இதில், தொற்று அறிகுறி இருந்த 18 லட்சத்து 8 ஆயிரத்து 939 நபர்களுக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று 397 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 49, அண்ணா நகர் மற்றும் தண்டையார்பேட்டையில் 37 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
நேற்று நடைபெற்ற 397 மருத்துவ முகாம்களில் மொத்தம் 18 ஆயிரத்து 118 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் தொற்று அறிகுறி இருந்த 508 நபர்கள் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கு ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.