சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள்! - காவல் துறை விருதுகள்
சென்னை: சிறப்பாக பணியாற்றிய ஐபிஎஸ் அலுவலர்கள் உள்ளிட்ட காவலர்களுக்கு 2019-20 ஆம் ஆண்டுகளுக்கான பதக்கங்களை தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் வழங்கினார்.
சென்னை: காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை மற்றும் குடிமை பாதுகாப்பு படை ஆகிய துறைகளில் சிறந்து பணியாற்றும் காவல் துறையினருக்கு ஆண்டுதோறும் காவல் துறை பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
2019-20 ஆம் ஆண்டுகளுக்கான இந்திய குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், சிறப்பாக பணியாற்றிய 220 ஐபிஎஸ் அலுவலர்கள் உள்ளிட்ட காவல் துறையினருக்கு தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், சட்ட ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஆகியோர் பதக்கங்களை வழங்கினர்.
முதலமைச்சரின் வீர தீர செயலுக்கான பதக்கங்களை பெற்ற ஏழு காவல் துறை அலுவலர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையும், அண்ணா பதக்கம், சீர்மிகு காவலர் பதக்கம் பெற்றவர்களுக்கு 25 ஆயிரம் முதல் 50ஆயிரம் ரூபாய் வரையிலான காசோலைகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திர பாபு, சிபிசிஐடி, டிஜிபி பிரதீப் வி பிலிப், சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங், சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி தமிழ் செல்வன் உள்ளிட்ட பல ஐபிஎஸ் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
துணை ஆணையர் ஜவஹர் தலைமையில் காவல் துறை அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர், காவல் துறையின் மோப்பநாய் பிரிவு காவல் துறையினர், ஆயுதப்படை காவல் துறையினர், சட்டம் ஒழுங்கு காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.