இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "1535 முதல் 1675ஆம் ஆண்டுவரை சோழர்கள் காலத்தில் கோயில்களில் இருந்த தமிழ், தெலுங்கு, சமஸ்கிருத ஏட்டுச் சுவடி நூல்கள் தஞ்சையை ஆட்சிபுரிந்த நாயக்க மன்னர்களால் சேகரிக்கப்பட்டு, ‘சரஸ்வதி பண்டாரகம்’ என்ற நூலகம் அமைக்கப்பட்டு தஞ்சை அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
1675ஆம் ஆண்டு முதல் ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியால், பல அரிய ஓலைச்சுவடிகளும் நூல்களும் சேகரிக்கப் பெற்று, சரஸ்வதி மஹால் நூலகமாக அது பெயர்பெற்று, அனைத்தும் அங்கேயே பாதுகாக்கப்பட்டன.
பின்னர் 1916ஆம் ஆண்டு, தஞ்சை மாவட்டத்திலிருந்த ஆங்கிலேயே நீதிபதி ஒருவரின் முயற்சியால், அந்த நூலகம் அரசு உடைமையாக்கப்பட்டு, மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நூலகத்தைப் பராமரித்து வருகிறது. இந்த நூலகத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே தலைவராகவும் பொறுப்பு வகித்துவருகின்றார். பல்வேறு துறைகள் சார்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கே உள்ளன. குறிப்பாக, சித்த வைத்தியம் சார்ந்த ஓலைச்சுவடிகள் இங்குதான் பெருமளவில் உள்ளன.
தமிழ்நாட்டின் கலை, பண்பாட்டுத் துறைகளின் அறிவுப் பெட்டகமாக திகழும் இந்நூலகம், கடந்த 25 ஆண்டுகளாக, மேலாண்மை இயக்குனர், மேலாண்மை அலுவலர்கள் இல்லாமல் இருந்து வருகிறது. அப்பொறுப்புகளுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும், பல ஆண்டுகளாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அதனால், நூலகம் சீரழிந்து வருகின்றது.
தரங்கம்பாடியில் அச்சிடப்பெற்ற முதல் அச்சு நூல் வேத ஆகமம் என்ற அச்சு நூல், இந்த நூலகத்தின் காட்சியகத்தில் வைக்கப்பெற்று இருந்தது. அது கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் நாள் திருடு போய்விட்டது. அந்த நூல், இப்போது, ஜெர்மனி நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளது.
நூலகப் பொறுப்பாளர்கள், பெருந்தொகைக்கு அந்தப் புத்தகத்தை விற்றுவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், அந்நூல் திருடுபோன நாளில், இந்த நூலகத்திற்கு வந்த ஜெர்மானியர்கள் திருடிச் சென்றதாகப் பொறுப்பாளர்கள் கூறுகின்றனர். இது குறித்த விசாரணை முழுமை பெறவில்லை. ஜெர்மனியில் இருந்து அந்தப் புத்தகத்தை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. பன்னாட்டுச் சந்தையில், அதன் ஏல மதிப்பு பல கோடி ரூபாய்கள் ஆகும். அதுபோன்ற அரிய பல நூல்களும் திருடு போயிருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆங்கிலேயே அரசு காலத்தில், பர்னல் என்பவரால் ஆக்கம் பெற்ற நூல் பட்டியல் ஆவணம் இங்கு இருக்கிறது. அதை ஒப்பிட்டு கணக்கு எடுத்துப் பார்த்தால், திருடுபோன நூல்களின் விவரத்தை எளிதில் அறியலாம். தவறான பைண்டிங் முறையாலும், கரையான்களாலும் அழிந்து போன நூல்களை, மன்னரின் சேகரிப்புத் தொகுப்பில் இருந்து மாவட்ட ஆட்சியர் நீக்கி இருக்கின்றார். இது குறித்து, அறிஞர்கள் குழுதான் முடிவு செய்ய வேண்டும்.
15 ஆண்டுகளுக்கு முன்பு, 65 ஊழியர்கள் இங்கே பணிபுரிந்து வந்தனர். இப்போது வெறும் 10 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். ஓலைச்சுவடிகளை, நூல்களாக அச்சிடும் பணி முறையாக நடைபெறவில்லை. தடைப்பட்டு நிற்கிறது. இந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
திருடுபோன பழந்தமிழ் நூல்களை மீட்க வேண்டும். நூலகத்தைத் தரம் உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டின் சொத்துகளுள் ஒன்றாகிய தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சரபோஜியின் 243ஆவது பிறந்தநாள் விழா: மாலை அணிவித்து மரியாதை!