சென்னை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் குமார் (24). இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, அதே கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மருத்துவமனையில் கரோனா பணி செய்து வந்த இவரை, மருத்துவமனை நிர்வாகம் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி, தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி கிராண்ட் ஹோட்டலில் அறை எடுத்து கொடுத்துள்ளது.
இதையடுத்து கடந்த 14ஆம் தேதி முதல் தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் இருந்து வந்துள்ளார். இவர் தினமும் உறவினர்களிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். கடந்த 25ஆம் தேதி முதல் யாரையும் தொடர்பு கொள்ளாமல் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஹோட்டல் ஊழியர்களிடம் தகவல் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நேற்றிரவு ஹோட்டல் ஊழியர்கள் லோகேஷ் குமார் தங்கியிருந்த அறையை நீண்ட நேரமாகத் தட்டியும் திறக்காததால் மாற்று சாவியை பயன்படுத்தி கதவை திறந்துள்ளனர். அறையினுள் லோகேஷ் குமார் வாந்தி எடுத்த நிலையில், படுக்கையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, ஹோட்டல் நிர்வாகம் பாண்டி பஜார் காவல் துறையினருக்குத் தகவலளித்தனர்.
பின்னர் லோகேஷ்குமாரின் சடலத்தைக் கைப்பற்றிய காவலர்கள் உடற்கூறாய்விற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்த காவல் துறையினர், மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.